நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு சுமார் 500 டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டன. வியாபாரம் குறைவான கடைகள், கோவில், கல்வி நிறுவனங்கள் அருகிலிருக்கும் கடைகள், மக்களின் கோரிக்கையை ஏற்று சில கடைகள் என மொத்தம் 500 கடைகள் மூடப்பட்டதால் தற்போது 4,800-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர 2 என கணிசமான நாட்கள் மூடப்படும். இது தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளுமே தேர்தல் சமயங்களில் மூடப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மூடப்படும்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் தேர்தல் நடந்த போது, ஏப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டன. அடுத்ததாக வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21-ம் தேதியும் மூடப்பட்டது. இந்நிலையில் நாளை (மே 1) தொழிலாளர் தினம் என்பதால் மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக தொழிலாளர் தினம் நாளை (புதன்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.