மைக் ஐ ஆஃப் செய்து விட்டு பிறப்பித்த உயர்நீதிமன்ற உத்தரவு!! வில்சன் எம்.பி. குற்றச்சாட்டு!!
தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்ட 10 சட்டமசோதாக்களை உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து நிறைவேற்றியது. இந்த சட்டங்களின் படி தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் வரும் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமனம் செய்து கொள்ளலாம்.
பாஜக தென்மாவட்ட நிர்வாகி ஒருவர் விடுமுறை கால உயர்நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு துணைவேந்தர்களை நியமனம் செய்யலாம் என்ற பிரிவுகளுக்கு மட்டும் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன்., லஷ்மிநாராயணன் அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு மற்றும் இடைக்கால தடை குறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது குறித்து உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்ததாகவும் வில்சன் கூறியுள்ளார்.
ஆனால் இதை கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்தனர். அப்போது மைக் ஐ ஆஃப் செய்து இருந்ததால் நீதிபதிகளின் உத்தரவு தங்களுக்கு கேட்கவில்லை என்றும் அது குறித்து கேட்டபோது இணையத்தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மனுதாரர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர், பொது நல வழக்குக்கான எந்த முகாந்திரமும் இல்லை, அவசர வழக்காக எடுத்துக் கொள்ள எந்த ஒரு காரணமும் கோரிக்கையும் இல்லை. ஏப்ரல் 14ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு இடைப்பட்ட நாட்களில் மனு தாக்கல் செய்யாமல், விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில் எந்த அவசரதேவையும் இல்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பிரதி கிடைத்ததும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்படும் என்று வில்சன் கூறியுள்ளார்