ஹெல்மெட் போட்டா 1 கிலோ பூண்டு இலவசம்.. தஞ்சை போக்குவரத்து காவலர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு!

 

ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு தலா 1 கிலோ விலையில்லாமல் பூண்டு வழங்கி, தஞ்சாவூர் மாவட்ட போக்குவரத்து காவல் ஒழுங்கு பிரிவு போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இதற்காக ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தஞ்சை மாவட்ட போக்குவரத்து காவல் ஒழுங்கு பிரிவு சார்பில், பல்வேறு தனியார் தொண்டு நிறுவன அமைப்புகளுடன் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நூதன முறையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று (பிப். 12) ‘பூண்டு இதயத்தைக் காக்கும், ஹெல்மெட் தலைமுறையைப் பாதுகாக்கும்’ என்ற கருப்பொருளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், தஞ்சாவூர் நகர உட்கோட்ட போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் மற்றும் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் ஆகியோர் இணைந்து இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சுமார் 50 நபர்களுக்கு 1 கிலோ பூண்டு விலையில்லாமல் வழங்கினர். பூண்டு கிலோ ரூ.600க்கு விற்கும் போது, வாகன ஓட்டிகளுக்கு விலையில்லாமல் வழங்கியதை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், “தஞ்சாவூரில் 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஓட்டி வருகின்றனர். மேலும் 100 சதவீதம் ஹெல்மெட் அணியும் வரை தொடர்ந்து இதுபோல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இருசக்கர வாகன விபத்தில் தலையில் ஏற்பாடும் காயத்தினால் தான் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார மையம் அறிவிக்கையின்படி, ஹெல்மெட் அணிவதால் 70 சதவீதம் படுகாயம் மற்றும் 30 சதவீதம் உயிரிழப்பைத் தடுக்கலாம்.

அதே போன்று உணவில் பூண்டு சேர்ப்பது இதயத்தை பலமாக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். தற்போது பூண்டின் விலை உயர்ந்து வரும் நிலையில் 'உணவில் பூண்டு சேர்ப்பது இதயத்தைக் காக்கும், இரு சக்கர வாகனம் இயக்கும்போது ஹெல்மெட் அணிவது நமது தலையை மட்டுமல்ல நமது தலைமுறையையும் சேர்த்தே பாதுகாக்கும்' என்ற கருத்துருவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் தற்போது கடுமையாக விலை உயர்ந்துள்ள பூண்டை விலையில்லாமல் வாகன ஓட்டிகளுக்கு வழங்குவதன் மூலம் பொதுமக்களுக்கும் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு எளிதில் சென்றடையும்” என்று கூறினார்.