தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

 

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் (டிச. 1) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (டிச. 2) காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று (டிச. 3) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்தது.

இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.3) வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச. 4) முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் (டிச. 5) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாகக் கடக்கக்கூடும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் எனவே இந்த 14 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.