சென்னையில் தொடர் கனமழை.. வெள்ளநீரில் அடித்துச் செல்லப்படும் வாகனங்கள்.. பரபரப்பு வீடியோ!
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் மழைநீரில் கார்கள் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல் நேற்று உருவானது. புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.
இந்த புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் இரவில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது. அதிகபட்சமாக பெருங்குடியில் 29 செமீ மழை பதிவாகி உள்ளது. அடையாறுவில் 23.5 செ.மீ, மீனம்பாக்கத்ஹ்டில் 23.15 செ.மீ, கோடம்பாக்கத்தில் 21.8 செ.மீ, வளரசவாக்கத்தில் 21.5 செ.மீ, சோழிங்கநல்லூரில் 21.36 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தொடர் மழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது.