கனமழை எதிரொலி.. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  வானிலை முன்னறிவிப்பு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (நவ. 25) பள்ளிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திரூவாரூரில் ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் இருப்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு திரும்ப பெறப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.