மதுரையில் பலத்தக் காற்றுடன் பெய்த மழை.. அறுந்து தொங்கிய மின்சார வயர்.. மகன் கண்முன்னே தாய் - தந்தை பலி!

 

மதுரையில் பலத்த காற்றால் அறுந்து விழுந்த மின்சார வயர் உரசியதில் கணவன், மனைவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை டிவிஎஸ் நகர் துரைசாமி சாலையில் வசித்து வந்தவர் முருகேசன் (50). இவரது மனைவி பாப்பாத்தி (44). இந்த தம்பதியினர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தனர். நேற்றிரவு பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டுக்கு பைக்கில் புறப்பட்டனர். அவர்களை பின்தொடர்ந்து அவர்களின் மகனும் சைக்கிளில் சென்றுள்ளார்.

பலத்த காற்று வீசிய போது அப்பகுதியில் மின்சார வயர் அறுந்து தொங்கியுள்ளது. இதை முன்னாள் சைக்கிளில் சென்ற மகன் பார்த்து பெற்றோரிடம் கூறவந்த சில நொடிகளில், கவனிக்காமல் பைக்கில் வந்த அவர்கள் மீது மின்சார வயர் பட்டதில், இருவரும் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை பார்த்த மகன் கூச்சலிட்ட நிலையில், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த சுப்பிரமணியபுரம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த பகுதியில் தெருவிளக்கு நீண்ட நாள்களாக எரியவில்லை என பலமுறை மாநகராட்சியில் புகாரளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் அந்தப் பகுதி முழுவதிலும் இருள் சூழ்ந்திருந்ததால், மின்சார வயர் அறுந்து விழுந்தது தெரியாமல் தம்பதியினர் உயிரிழந்ததாக... அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.