புத்தாண்டு 2025! தலைவர்கள் வாழ்த்து!!
2025 புத்தாண்டு பிறந்ததை யொட்டி தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடட்டும். எங்கும் நலமே சூழட்டும்” வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் 2024ம் ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகளைக் குறிப்பிடும் வகையில் முக்கிய நிகழ்வுகள், சாதனைகளின் தொகுப்பை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
”புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
”மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம், உழவர்கள் தொழிலாளர்கள் நலன் காப்போம். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும், ஒற்றுமை, சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
”மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கொண்டாடி வரவேற்கும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
”தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை நீண்டதொரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.அதில் “மாற்றம் ஒன்றே மாறாதது. இந்தச் சூழல் மாறும். நம் தமிழக மக்கள், இந்த இருட்டிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும், புத்தாண்டை எதிர்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தேர்வு, நமக்கானது மட்டுமின்றி, நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தேர்ந்தெடுப்போம். தமிழகத்தை மீண்டும் சிறப்பானதாக்குவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றியப் பிரதமர் மோடிக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தனித்தனியே புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்திலும் வெளியிட்டுள்ளார். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் சொல்ல மறந்து விட்டார் போல்.