தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்!

 

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 11-ம் தேதி தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 20 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவைப்படுவது கண்டறியப்பட்டது. இதற்காக, சேலம், தர்மபுரி, திருச்சி, திருவண்ணாமலை, கடலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 95 ஆயிரம் மேற்பட்ட புத்தகங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணைப்படி மாணவர்களுக்கு இன்று (டிச. 13) முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது.

அதன்படி, இன்று (டிச. 13) தொடங்கி டிசம்பர் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் நண்பகல் 12. 30 வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது. அதேபோல் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு காலை 10 மணி முதல் நண்பர்கள் 12.30 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 11-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12.45 வரை நடைபெறுகிறது. 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு பகல் 1.15 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது.