மக்கள் சேமிப்பில் பாதி மாநிலங்களின் பங்கு.. உண்மையை மறைத்ததாக பிரதமர் மோடி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!!
இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயை சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளதற்கு அந்த சேமிப்பில் பாதி பங்கு மாநிலங்களிலிருந்து வருகிறது என்பதை மறைத்துள்ளார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது,
”வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயை சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம். 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்திய குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே? மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது.
இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது. மற்றொரு புறம், ஒன்றிய பா.ஜ. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. இந்தி திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது.
இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்? தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளை தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதை தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.