பெரும் சோகம்.. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்!

 

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 82.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால் மற்றும் மீனாம்பிகை அம்மையாருக்கும் மகனாக கடந்த 1941-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி பிறந்தாா். பங்காரு என்றால் தெலுங்கு மொழியில் ‘தங்கம்’ என்று பொருள். இவர், ஆசிரியர் பணியில் இருந்தபோது உத்தரமேரூரைச் சோ்ந்த பள்ளி ஆசிரியையான லட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.

1970-ம் ஆண்டு தொடக்கத்தில் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்து வந்த இவர், 1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்று வரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.

பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்து வந்தனர். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவரை பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேல்மருத்துவத்தூரில் இவர் தொடங்கிய அறக்கட்டளை பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்ய அனுமதித்தும், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தியும் ஆன்மீகப் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார்.

பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சேவையைப் பாராட்டி, கடந்த 2019-ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. கடந்த ஓராண்டாகவே உடல்நிலை சரியில்லாமல் பங்காரு அடிகளார் சிகிச்சை பெற்று வந்து நிலையில், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவு ஆதிபராசக்தி சித்தர் பீட பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.