அரசுப் பேருந்து, டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்.. 30-க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை..?

 

கல்பாக்கம் அருகே அரசு பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்திருந்தனர். இந்தப் பேருந்து செங்கல்பட்டு அருகே மகாலிங்க நத்தம் என்ற பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்தில் வந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்ட அப்பகுதி மக்கள், அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அதேபோல, அரசு பேருந்து நடந்துநர், ஓட்டுநர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்து காரணமாக செங்கல்பட்டு - மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.