சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து.. திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலும் விரைவு ரயிலும் மோதி விபத்துக்குள்ளனது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை வழியாக பிகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில் வழக்கம்போல் வந்துகொண்டிருந்தது. திருவள்ளூர் அடுத்த கவரப்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கே கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக லூப் லைனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.
இதில், ரயில் ஒன்றின் மீது ஒன்று மோதியதில் 2 பெட்டிகள் மேலே ஏறி நிற்கிறது. மேலும் ஐந்து பெட்டிகள் இந்த விபத்தில் தடம் புரண்டது. இதில் ஏசி பெட்டிகளும் தடம் புரண்டது. பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது.
தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வேகமாக மோதியதால் சில பெட்டிகள் தீப்பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில் சிலர் படுகாயம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து உறுதி செய்துள்ள ரயில்வே அதிகாரிகள், விபத்து தொடர்பான கூடுதல் தகவலை வெளியிடவில்லை. இதற்கிடையே, விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து பயணிகள் வெளியேறி வருகின்றனர். அதேநேரம், ரயில்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள், மீட்புகுழுவினர் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், சிக்னல் கோளாறு காரணமாக ரயில் விபத்து நடந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த இடம் நகர் பகுதியில் இருந்து தள்ளி இருப்பதால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.