மகளிக்கு குட்நியூஸ்.. தீபாவளிக்கு மகளிர் உரிமைத் தொகை.. வெளியான முக்கிய அறிவிப்பு!

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இம்மாதம் முன்கூட்டியே பயனாளர்களிடம் வங்கி கணக்கில் வரவு வைக்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் அமலுக்கு வந்த நிலையில் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மாதம்தோறும் கலைஞர் மகளிர் தொகை திட்டத்தின் கீழ் வங்கி கணக்கில் 15-ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதம்தோறும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வந்தால் முன்கூட்டியே 14-ம் தேதியே வரவு வைக்கப்படுகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முன்கூட்டியே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்து தமிழ்நாடு முதலவர்தான் முடிவு எடுப்பார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிராகரிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் மேல்முறையீடு மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்களது விண்ணப்பங்களும் பரிசீலனையில்  உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.