பொதுமக்களுக்கு குட் நியூஸ்.. சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூபிஐ வசதி அறிமுகம்!

 

சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான வசதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் தற்போது 31 பணிமனைகள் உள்ளன. இதன்மூலம் 629 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர பேருந்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “சென்னையில் உள்ள அனைத்து டிப்போக்களிலும் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த மின்னணு டிக்கெட் இயந்திரங்கள் இப்போது  அனைத்து டெப்போக்களிலும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த இயந்திரங்கள் மூலம் யுபிஐ, கார்டு மற்றும் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம். இதற்காக நடத்துநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை எம்டிசி பேருந்துகளில் பொதுமக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணிக்கலாம். 

சென்னை பேருந்துகளில் பயணிப்போர் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பேருந்துகளில் பயணிக்கும் போது சிக்கல் ஏற்பட்டால் அல்லது இதில் சந்தேகங்களுக்கு 149 என்ற எண்ணைப் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.