மாணவர்களுக்கு குட் நியூஸ்... பள்ளிக்கல்வி ஆணையரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

 

அரசு பள்ளிகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, “பள்ளி அளவில் கல்வி, இணைச்செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக, தேசிய, மாநில அளவிலான கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். கொரோனா தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் செயல்படாத பல்வேறு மன்றங்களை புதுப்பித்து அவை சிறப்பாக நடைபெற வழிவகை செய்யப்படும்” என அறிவித்தார்.

இதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், திறன்களை வெளிப்படுத்தி மாணவர்களை வெளிநாடு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்காகவும் பள்ளி வகுப்பறைகளில் ஒவ்வொரு வாரமும் கலை செயல்பாடுகளுக்கென இரு பாடவேளைகளும், மன்றச்செயல்பாடுகளுக்கென இருபாட வேளைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் அவ்வப்போது போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்போது அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படம் உள்ளிட்ட போட்டிகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த போட்டிகள் பிப். 13-ம் தேதி முதல் வட்டார மற்றும் மாவட்ட, மாநில அளவில் நடைபெற உள்ளது. இதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம் என்றும் வெற்றி பெறும்  மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வி ஆணையரகம் அறிவித்துள்ளது.

இப்போட்டிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். இதில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.