ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. விரைவில் புதிய ரேஷன் கார்டு.. வெளியான முக்கிய தகவல்!

 

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில், அதுகுறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அத்துடன் பண்டிகை காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரண பொருட்கள் என அனைத்தும்  ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு இந்த உதவி தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் காரணமாக கூட்டுக்குடும்பமாக இருந்த பலர், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனால், திடீரென ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. அதாவது, உணவு வழங்கல் துறை, புதிய ரேஷன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று வட்ட வழங்கல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி நடைபெறவில்லை.. எனினும், புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.

அதேபோல, தனி குடும்ப அட்டைக்காக ஏராளமானோர் விண்ணப்பித்து கதத்திருக்கிறார்கள். அதேபோல, இதுவரை கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள், தனியாக வாடகை வீடுகளில் வசித்து புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு நடுவில், இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் கடந்த 5 மாதமாகவே மேற்கொள்ளப்படவில்லை.

அனைத்து தேவைகளுக்குமே, ரேஷன் கார்டுகள்தான் அடிப்படை ஆதாரமாக உள்ளதால், அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லையே என்று பொதுமக்கள் குமுறுகிறார்கள். மகளிர் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே புதிய ரேஷன் கார்டு வழங்குவது நின்றுவிட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. அதிகாரிகள் எப்போது செயல்பாட்டை அனுமதிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன், கள ஆய்வு பணிகளை தொடங்குவோம். ஆன்லைன் வழியாகவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.