கர்ப்பிணி பெண்களுக்கு நற்செய்தி.. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ஏப்ரல் 1-ம் தேதி முதல் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, பிக்மி எண் பெற்றவுடன் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, நான்காவது மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதற்கிடையில், உடல் திறனை மேம்படுத்தும் வகையில் சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், உலர் பேரிச்சை, பிளாஸ்டிக் கப், பக்கெட், ஆவின் நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு அடங்கிய ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பெட்டகம் இரண்டு முறை வழங்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் மூன்றாவதுதவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4 ஆயிரம், குழந்தைக்கு ஒன்பதாவது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ. 2 ஆயிரம் என ரூ.14 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை தமிழ்நாட்டு முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி மாத்ருவந்தனா யோஜனா திட்டத்தின்நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் அத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதனடிப்படையில், இதற்குமுன்பு வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்றுதவணைகளில் வழங்கப்படவுள்ளது. கர்ப்ப காலத்தின் நான்காவதுமாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல், பேறு காலத்தில் மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பபட உள்ளன. இந்த புதிய நடைமுறை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய நடைமுறையை செயல்படுத்துவது குறித்த அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.