கல்லூரி மாணவர்களே குட்நியூஸ் ! ரூ 1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின் !
தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் நாளை (ஆக.9) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை ஆகஸ்ட் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதன்மூலம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அரசுப் பள்ளிகளிலும், தமிழ் வழியில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படித்து முடித்து, பட்டம், பட்டயம், மற்றும் ஐடிஐகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த தமிழ் புதல்வன் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 401.47 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் நாளை (ஆக.9) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்விச் சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்” என இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நாளை (9.8.2024) கோவை மாநகரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுப் பயன் அடைவார்கள்.
இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்புக்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.
கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது, கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. குடும்பங்களின் வளத்தை மேம்படுத்துகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் மேலும் உயர்த்துகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.