காவல் நிலையம் முன்பு கள்ளக்காதலியும் - மனைவியும் கட்டிப்புரண்டு சண்டை.. வாணியம்பாடியில் பரபரப்பு!
வாணியம்பாடியில் காவல் நிலையம் முன்பு இளைஞரின் மனைவி - கள்ளக்காதலி கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் முஹமத் உவேஸ், அந்த நகரிலேயே செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். இவருக்கும் அவரது நண்பனின் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது. அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் கணவன் - மனைவியாக வசிக்க தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் அந்த இளைஞரின் தந்தை திடீரென இறந்துவிட்டார். இதனால் தந்தைக்கு இறுதிச்சடங்குகள் செய்ய செல்போன் கடை வைத்திருந்த இளைஞர் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது முதல் மனைவி அவரை மீண்டும் பிரிந்து செல்ல விடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்று விட்டார். தனது கணவனுடன் கள்ளக்காதலிக்கு தெரியாமல் மனைவி வெளியேறிவிட்டார்.
இதனிடையே கடந்த ஒரு வாரமாக அந்த இளைஞரின் கள்ளக்காதலி, தனது காதலனை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்து உள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்திருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண், தனது காதலனை தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என பலரிடம் கேட்டதுடன், தீவிரமாக பல இடங்களில் தேடினார்.
அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதை யாரோ கூறியதால் கண்டுபிடித்துவிட்டார். அங்கு சென்ற கள்ளக்காதலி, இளைஞர் வசித்து வந்த வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து புகார் அளிப்பதற்காக அந்த இளைஞர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் புகார் அளிக்க வந்திருப்பதை அறிந்த கள்ளக்காதலி போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று செல்போன் கடை உரிமையாளரான இளைஞரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கி உள்ளார்.
இதனிடையே கள்ளக்காதலி தனது காதலனை பார்த்து , இந்த நான்கு வருடத்தில் உனக்கு 5 லட்சம் ரூபாய், மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளேன். இவை அனைத்தையும் கொடுத்துவிடு என்று கூறியவர், திடீரென நீ என்னுடன்தான் வாழ வேண்டும் என கூச்சலிட்டார். கள்ளக்காதல் சண்டையால் வாணியம்பாடி மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.