விஜயகாந்த் உடலை வட்டமிட்ட கருடன்.. சொர்க்கத்திற்கு அழைத்த பெருமாள்.. மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!

 

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று காலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நேரம் செல்லச் செல்ல விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வருவோரின் எண்ணிக்கை அதிகமானதால் கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்சி அலுவலக வளாகத்திலும் நெரிசல் அதிகமானது. எனவே, விஜயகாந்தின் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பிற்பகல் விஜயகாந்த் உடல், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கோயம்பேடு கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டது. பூந்தேரில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு வழிநெடுகிலும் கூட்டம் கூட்டமாக நின்றிருந்த மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மேம்பாலங்கள், உயர்ந்த கட்டடங்கள் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நின்று கொண்டு பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு பிரேமலதா, மகன்கள் ஆகியோர் கை கூப்பி நன்றி தெரிவித்தனர்.

வயதானவர்கள், குழந்தைகள் என அனைவரும் கண்ணீல் மல்க நின்றுக் கொண்டு இறுதியாக பயணித்த விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில்தான் அவருடைய உடல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடக்கும் போது வானில் இரு கருடன்கள் வட்டமிட்டன. அவருடைய உடலுக்கு 3 முறை வட்டமிட்ட கருடனை பார்த்து அங்கிருந்தோர் மெய்சிலிர்த்தனர். உடனே பிரேமலதா உள்ளிட்டோர் கருடனை கும்பிட்டனர்.

கள்ளழகர் படத்தில் நடித்த விஜயகாந்துக்கு ஆண்டாள் என்றால் மிகவும் பிடிக்கும். மதுரைக்கு சென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் தங்க முலாம் பூச தங்கத்தை அன்பளிப்பாக விஜயகாந்த் கொடுத்துள்ளார். அத்துடன் விஜயகாந்தின் கல்லூரிக்கு ஆண்டாள் அழகர் என்றுதான் பெயர். மார்கழி மாதத்தில் இறந்தவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள். தற்போது விஜயகாந்தை கருடன் வட்டமிட்டதால் பெருமாளே நேரில் வந்து விஜயகாந்தை சொர்க்கத்திற்கு அழைத்து செல்வதாகவே கருதப்படுகிறது.