வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி.. தூங்கிக்கொண்டிருந்த போது நேர்ந்த துயரம்!

 

திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அம்பிகாபுரம் காந்தி நகர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து (48). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (45). இந்த தம்பதிக்கு ஹரிணி (12), பிரதீபா (11) என்கிற 2 மகள்கள் இருந்தனர். குழந்தைகள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களுடன் மாரிமுத்துவின் தாய் சாந்தி (60) வசித்து வந்தார்.

இந்த நிலையில் மாரிமுத்து உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று சென்னைக்கு சென்றிருந்தார். இதனால், வீட்டில் மாரிமுத்து மனைவி சாந்தி உள்ளிட்ட நான்கு பேர் மட்டும் இருந்தனர். நேற்று வழக்கம்போல் இரவு தூங்கச் சென்றனர்.

அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேரும் கட்டிட ஈடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியமங்கலம் போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் வீட்டில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் வீடானது 1972-ம் ஆண்டு கட்டப்பட்ட சுண்ணாம்பு கட்டிடம் என்பதால் இடிந்து விழுந்திருப்பது முதல்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார், மருமகள், பேரக் குழந்தைகள் என 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.