ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. கார் பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். இதை மறுத்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பந்தயம் நடத்த அரசு செலவிட்ட தொகையை திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து பந்தயம் நடத்தும் அமைப்பு தான் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது எனவும், அந்த வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கினார்.
பொது சாலையை அணுகும் உரிமையை தடுக்க முடியாது எனவும், பந்தயம் நடத்துவதற்கான வழித்தடத்தை ஆய்வு செய்து சர்வதேச அமைப்பு ஒப்புதல் வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டார். இருங்காட்டுக் கோட்டையில் சுற்றுச்சுவருடன் கூடிய சுற்றுப்பாதையில் பந்தயம் நடத்த எந்த எதிர்ப்பும் இல்லை எனவும், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை கார் ரேஸுக்காக மூட முடியாது எனவும் பொதுமக்களுக்கு இடையூறாக நடத்தப்படும் பந்தயத்தை எப்படி பொதுநலன் என கூற முடியும் என்றும் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கடந்த முறை கார் பந்தயத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பொதுமக்கள் பாதுகாப்பு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்கக்கூடாது, ஒலி கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 நிபந்தனைகளுடன் பந்தயத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் எந்த நிபந்தனையும் மீறப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, கார் பந்தயம் நடத்துவது தொடர்பாக இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், போக்குவரத்து சீராக இருக்க வேண்டும். மக்களுக்கு அசவுகர்யம் இருக்கக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளுக்கு இடையூறு இருக்க கூடாது. போக்குவரத்து ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.
இதையடுத்து, பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பாதுகாப்பு, போக்குவரத்து குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின் படி அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், எப்ஐஏ சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்தக் கூடாது என்றும் சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
மேலும், எப்ஐஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க அரசுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை கோரிய வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தது. இதன்படி இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
யாருக்கும் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை, ரயில் நிலையங்கள் செல்பவர்கள் உள்பட யாருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளது.