RBI முன்னாள் கவர்னர் காலமானார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

 

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கடரமணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 92.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக இருந்த நாகர்கோவிலில் பிறந்த இவர் கடந்த 1985 முதல் 1989-ம் ஆண்டு வரை நிதியமைச்சகத்தின் நிதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இதனை தொடர்ந்து, இவர் கடந்த 1990 முதல் 1992 வரை என இரண்டு காலம் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள் இருக்கின்றனர். இதில் ஒருவர் தான் முன்னாள் தமிழ்நாடு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்ற நேரம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாகக் குறைந்து, இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது. அந்த நெருக்கடியை சிறப்பாக கையாண்டு, நாட்டை மீட்டதில் பெரும் வெற்றி பெற்றார். மேலும், 1992ம் ஆண்டு பங்குச் சந்தை ஊழலால் வங்கிகளின் செயல்பாடு நிலைகுலைந்து போயிருந்த சூழலில் இவர் எடுத்த நடவடிக்கையால் வங்கிகளில் நிலைத்தன்மை ஏற்பட்டது.

வெங்கடரமணன் ஓய்வுக்குப் பிறகும், அசோக் லேலண்ட் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் லிமிடெட், நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவராக பணியாற்றினார். மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஸ்பிக், பிரமல் ஹெல்த்கேர் லிமிடெட், தமிழ்நாடு வாட்டர் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற வாரியங்களின் பொறுப்புகளிலும் இருந்தார்.

இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கடரமணன் வயது மூப்பின் காரணமாக இன்று காலை சென்னையில் காலமானார். அவரது சேவை என்றும் மறக்கமுடியாது என்று பல்வேறு பொருளாதார அறிஞர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெங்கிடரமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.