150 ஏக்கரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு.. இடத்தை இறுதி செய்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கி வைத்தார். அவர் வரும் 2026-ம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜய் கட்சி சார்பில் பிரம்மாண்ட மாநாடு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கு முறையான அனுமதி கிடைக்கப்படவில்லை என்ற தகவல்களும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சிக்கான கொடியையும் கொடி பாடலையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார்.
கட்சிக் கொடி வெளியீட்டிற்குப் பிறகு அனைவரது பார்வையும் விஜய் கட்சியின் மாநாடு மீது தான் இருந்து வந்தது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெற்று வந்தநிலையில், தவெக தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏடிஎஸ்பி திருமாலை நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் அடுத்த மாதம் 23-ம் தேதி கட்சி மாநாடு நடத்த அனுமதிக்குமாறு மனு அளித்துள்ளனர். எஸ்பி அலுவலகத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்க உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளநிலையில், அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநாடு குறித்த விவரங்களை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்று கூறினார்.