மதுரை ரயிலில் தீ விபத்து.. ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

 

மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பார்ட்டி கோச் எனப்படும் தனியாக ரயில் பெட்டியை முன்பதிவு செய்து ஒரு குழுவினர் பயணித்தனர். இந்த ரயில் பெட்டி, மற்ற விரைவு ரயில்களில் இணைப்புப் பெட்டியாக சேர்க்கப்பட்டு பயண சேவை வழங்கப்பட்டது.

கடந்த 17-ம் தேதி லக்னோவில் பயணத்தை தொடங்கிய 63 பேர் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்தை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நாகர்கோவிலில் இருந்து நேற்று புனலூர் - மதுரை விரைவு ரயிலில் இணைக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி, இன்று அதிகாலை, 3.47-க்கு மதுரை வந்தடைந்தது. இந்த பெட்டி, அனந்தபுரி விரைவு ரயிலில் இணைக்கப்பட்டு நாளை சென்னை வந்தடைய இருந்தது.

இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் பெட்டியில் காலை 5.15 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் உயிரிழந்த 10 பேரும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “ரயில் தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.