பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 100 பேர் கதி என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்!

 

 சங்கரன்கோவில் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள பட்டாசுகள் வெடித்ததில், ஆலையின் கட்டிடங்கள் மற்றும் அருகே உள்ள கட்டிடங்கள் இடிந்து சேதமாகி உள்ளது.

இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்தவர்கள் இடுபாடுகளில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் தீயணைப்புத் துணையினர், மீட்புப் பணிகளுக்கு உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் அந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையுடன் கூடியுள்ளனர். தீயணைப்புத் துறையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சங்கரன்கோவில் காவல் கண்காணிப்பாளர் சுதீர் தலைமையில், ஏராளமான போலீசார் அந்த பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில், 4 ஆம்புலன்ஸுகள் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.