அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

 

அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக அடிப்படை மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் ஒரு மாவட்டத்துக்கு தலா 120 மாணவிகள், 120 மாணவர்கள் என 240 பேர் மாதிரிப் பள்ளிக்குத் தேர்வு செய்யப்படுவர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நுழைவுத் தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும் பள்ளிகளின் அடிப்படை வசதி செயல்பாடுகள் குறித்து குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் உடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆனது மிகப்பெரிய துறையாகும். இந்த துறையின் அமைச்சராகிய நான் பள்ளிகளில் 77 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். அரசு பள்ளிகள் வட்டார கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலகம் மட்டுமல்லாமல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளலாம் எனவும்,

குளித்தலை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் வருகை பதிவேடு மற்றும்  அவர்களின் ஆய்வு பணிகள் குறித்தும் கேட்டறிந்ததாகவும், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து எம்எல்ஏக்களின் அனுமதி உடன் தான் அந்த தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும்,  அரசியல் பாகுபாடு பார்க்க கூடாத இந்த துறையில் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொண்டு எதிர்காலத்தில் அவர்கள் திறன் மிக்கவர்களாக அறிவு நிறைந்த சமுதாயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்பது  தவறான தகவல் என்றும், அரசுப் பள்ளிகளில் உரிய வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக அந்த மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களிடையே கூட்டங்கள் மற்றும் நாடகங்கள், கருத்தரங்கள் மூலம்  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.