அரசுப் பள்ளிகளில் மார்ச் 1 முதல் மாணவர் சேர்க்கை.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

 

தமிழ்நாட்டில் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1-ம் தேதியில் இருந்து தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கு, மார்ச் 1-ம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்க வேண்டும் எனவும், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்படுத்தி அரசின் திட்டங்களை எடுத்துக் கூறி, மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இக்குநர் அறிவொளி, தொடக்க கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில், வரும் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1-ம் தேதியில் இருந்து தொடங்கும்படி தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில், அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் மார்ச் 1-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி, அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்குபெறச் செய்து, ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகம் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்களைக் கொண்டும், ஆசிரியர்களைக் கொண்டும் பேரணி நடத்த வேண்டும். துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்வது வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பள்ளிக்கல்வி துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் சுவரொட்டிகள் வாயிலாகவும் விளம்பர தட்டிகள் வாயிலாகவும் மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற மாணவர் சேர்க்கையை இரட்டை இலக்கத்திற்கு கட்டாயமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.