என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. கணித பாடம் புரியாததால் எடுத்த விபரீத முடிவு!

 

தக்கலை அருகே கணித பாடம் படிக்க கஷ்டமாக இருந்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.  

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்பலத்தடிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கொத்தனாரான இவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு ராஜீவ், அஜய் (19) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் இளைய மகன் அஜய் நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அஜய் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். மறுநாளான நேற்று காலையில் வெகு நேரமாகியும் அஜய் அறையை விட்டு வெளியே வரவில்லை. அதே சமயத்தில் வேறொரு அறையில் தூங்கிய அவருடைய அண்ணன் ராஜீவ் கண்விழித்ததும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் தாய் சிந்து, அஜய் அறை கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மேலும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிந்து, அருகில் வசிப்பவர்களின் உதவியுடன் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். அதாவது அறையில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் அஜய் அசைவற்று கிடந்தார்.

பின்னர் ஜன்னல் வழியாக உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அஜயை கீழே இறக்கினர். தொடர்ந்து உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை திறந்து சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே அஜய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகன் இறந்த தகவல் அறிந்ததும் சிந்து கதறி துடித்தார். இந்த சம்பவம் குறித்து சிந்து தக்கலை போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் அஜய் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாணவர் அஜய்க்கு கணித பாடம் புரியாததால் அவர் குழப்பத்தில் இருந்துள்ளார் என்றும், இதை அவர் தனது சித்தியிடம் கூறி, கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை என கூறியதாகவும், பெற்றோரிடம் சொன்னால் வெளிநாட்டில் இருக்கும் தந்தை கோபப்படுவார் என பயந்து அஜய் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.