தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை மிதித்து கொன்ற யானை.. ஈரோட்டில் பரபரப்பு

 

கடம்பூர் அருகே தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை யானை மதித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் அணைக்கரை பைரமரத்தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாறன். விவசாயியான இவருக்கு வீட்டின் அருகிலேயே சொந்தமாக தோட்டம் உள்ளது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தார். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் மாறனின் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. 

இதனால் விவசாயி மாறன் சோளக்காட்டில் காவல் இருந்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மாறன் சோளக்காட்டில் காவலுக்காக படுத்திருந்தார். அப்போது தோட்டத்துக்குள் ஒரு காட்டு யானை புகுந்து பயிர்களை நாசம் செய்துகொண்டு இருந்தது. 

அதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மாறன் தப்பி வெளியே ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை துதிக்கையால் பிடித்து தூக்கி கீழே போட்டு காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் யானை அங்கிருந்து சென்றுவிட்டது.

இதனிடையே மாறனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து தோட்டத்தில் காவலுக்கு இருந்தவர்கள் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அங்கு மாறன் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனே கடம்பூர் வனத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாறனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.