கல்வி நிதி, ரயில்வே திட்டங்கள் . . பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை என்ன?

 

உடல்நலக்குறைவுக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு மூலம் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு அரசின் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். 

இந்தக் கோரிக்கை மனுவில், 

”சமக்ரா சிக் ஷா திட்​டத்​தின் கீழ் தமிழக அரசுக்கு மத்​திய அரசு நிதி வழங்​காமல் இருப்​ப​தால் லட்சக்கணக்​கான மாணவ, மாணவி​களின் எதிர்​காலம் பாதிக்​கப்​பட்டு வரு​கிறது. எனவே, 2024-25-ம் நிதி​யாண்​டுக்கு நிலு​வை​யில் உள்ள ரூ.2,151.59 கோடியை​யும், 2025-26-ம் ஆண்​டுக்​கான முதல் தவணை நிதி​யை​யும், பிஎம்ஸ்ரீ புரிந்​துணர்வு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட வேண்​டுமென நிபந்​தனை விதிக்​காமல் விரைந்து வழங்க வேண்​டும்.

10 ஆண்​டு​களுக்கு முன்பு அனு​ம​திக்​கப்​பட்டு செயல்​படுத்​தப்​ப​டா​மல் உள்ள திண்​டிவனம்​-செஞ்சி -திரு​வண்​ணா​மலை, ஈரோடு பழனி, அருப்​புக்​கோட்டை வழி​யாக மதுரை- தூத்​துக்​குடி, அத்​திப்​பட்​டு- புத்​தூர், மகாபலிபுரம் வழி​யாக சென்​னை-கடலூர் ஆகிய ரயில் பாதை திட்​டங்​களை செயல்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

திரு​வனந்​த​புரம் - கன்​னி​யாகுமரி இரட்டை பாதை பணியை துரிதப்​படுத்​த​வும், திருப்​பத்​தூர்-கிருஷ்ணகிரி ஓசூர் புதிய பாதைக்கு ஒப்​புதல் அளிக்​க​வும், கோவை- பல்​லடம்- கரூர், கோவை-கோபி-ப​வானி- சேலம், மதுரை-மேலூர்- துவரங்​குறிச்​சி-விராலிமலை- இனாம்​குளத்​தூர் மற்​றும் மதுரை நகரைச் சுற்றி புறநகர் ரயில் ஆகிய திட்​டங்​களுக்கு விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

சென்​னை​யில் புறநகர் ரயில் சேவை​களை உச்ச நேரங்​களில் இயக்க இடைவெளி நேரத்தை குறைக்​க​வும், குளிர்​சாதன மற்​றும் குளிர்​சாதன வசதி இல்​லாத மின்​சார ரயில் பெட்​டிகளை (EMU) கூடு​தலாக ஒதுக்​கீடு செய்​ய​வும், தாம்​பரம்- செங்​கல்​பட்டு 4-வது வழித்​தடத்தை செயல்​படுத்​த​வும், ஆவடி - ஸ்ரீபெரும்​புதூர் ரயில் பாதை திட்​டத்தை விரை​வாக செயல்​படுத்​த​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்

கோவை மெட்ரோ ரயில் திட்​டத்தை (34.8 கி.மீ) ரூ.10,740.49 கோடி​யிலும், மதுரை மெட்ரோ ரயில் திட்​டத்​தை(32 கி.மீ) ரூ.11,368.35 கோடியிலும் மேற்​கொள்ள தமிழக அரசு திட்ட மதிப்​பீடு தயாரித்து ஒப்​புதல் அளித்​துள்​ளது. மெட்ரோ ரயில் கொள்​கை​யின்​படி மத்திய அரசும், தமிழக அரசும் 50:50 என்ற சம பங்​களிப்பு அடிப்​படை​யில் நிதியை விரைந்து வழங்க ஆவன செய்ய வேண்​டும்.

இந்​திய மீனவர்​களின் பாரம்​பரிய மீன்​பிடி உரிமை​களைப் பாது​காப்​ப​தற்​கும், கைது செய்​யப்​பட்ட மீனவர்​கள் மற்​றும் அவர்களின் படகு​களை விரை​வாக விடுவிக்​க​வும் நிரந்​தரத் தீர்வு காண வேண்​டும்.

1971-1975-ல் சேலத்​தில் உருக்​காலை அமைக்க 3,973.08 ஏக்​கர் நிலத்தை தமிழ்நாடு அரசு வழங்​கியது. இதில் 1,503.44 ஏக்​கர் நிலம் இன்​னும் பயன்​படுத்​தப்​ப​டா​மல் உள்​ளது. இந்த நிலத்தை பாது​காப்​புத் தொழில் பெரு​வழிச் சாலை அமைக்​கும் திட்​டத்தை நிறு​வுவதற்கு ஏது​வாக திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கூறப்பட்டுள்ளது.