கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.. 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 

கனமழை காரணமாக பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி கடந்த 14-ம் தேதியில் இருந்து அந்த பகுதிகளில் மிதமான மழையாக ஆரம்பித்து, கடந்த 2 தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது.

நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 39 இடங்களில் அதி கனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

நெல்லை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் என பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய  மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், அதிகனமழை காரணமாக, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் செவ்வாய்க்கிழமை (19.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.