கார்த்திகேய சிவசேனாபதிக்கு டாக்டர். சுப்பராயன் விருது!

 

சென்னை கொங்குநாடு அறக்கட்டளையின் 34-ம் ஆண்டு விழாவில் கழக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு டாக்டர் சுப்பராயன் விருது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா ஹோட்டலில் சென்னை கொங்குநாடு அறக்கட்டளையின் 34-ம் ஆண்டு விழா கடந்த 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் அறக்கட்டளை விழா மலர் வெளியீடப்பட்டது. மேலும் பல்வேறு துறைகளை சார்ந்த சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விழாவில் அறக்கட்டளையின் தலைவர் ஒமேகா குழுமம் அப்பாவு சிறப்புரை வழங்கினார். அவர் கூறுகையில், “35 ஆண்டுகளுக்கு முன்பு 'அருட்செல்வர்' பொள்ளாச்சி மகாலிங்கம் மூலம் இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது. ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி  உதவித்தொகை, சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு பொருளாதார உதவிகள்  உள்ளிட்ட சேவைகளை இவ்வறக்கட்டளை செய்து வருகிறது” என்றார்,

இதனை தொடர்ந்து சக்தி குழும நிர்வாக இயக்குனர் மாணிக்கம் பேசுகையில், “ஆண்டுதோறும் அறக்கட்டளை சார்பில் சமுதாயத்திற்கு சேவை செய்து வரும் நோக்கிலும், நோக்கில், விழாவை நடத்தி வருகிறோம். கிராம ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையிலும், கல்வி படிப்பை தொடரும் வகையிலும் இந்த விழா அமைந்துள்ளது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் A. சக்திவேல், தொழில்துறை சேவைக்காக அருட்ச்செல்வர் விருதும், சமூக சேவைக்காக ‘சென்னை சில்க்ஸ்’ சந்திரனுக்கும், மருத்துவ சேவைக்காக டாக்டர் முருகநாதனுக்கும் வழங்கப்பட்டது. காலிங்கராயன் விருது பெஸ்ட் கார்ப்பரேஷன் குழுமத் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும் , ஈஸ்ட் மேன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் சந்திரனுக்கும் வழங்கப்பட்டது.

கொங்கு வேல் விருது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே. எம் நிட்வேர் உயர்திரு சுப்பிரமணியனுக்கும், சுந்தராம்பாள் விருது சிறு துளி அமைப்பு தலைவர் வனிதா மோகனுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் டாக்டர் சுப்பராயன் விருது கழக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும், இளம் ஊக்குவிப்பாளர் விருது  இன்ஸ்பயர் இளங்கோ ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. பாரத ரத்னா சுப்பிரமணியம் விருது ‘வனத்துக்குள் திருப்பூர்’, ‘வனம் இந்தியா' அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி  உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் டாக்டர் முருகநாதன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், சக்தி மசாலா நிறுவன நிர்வாக இயக்குனர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி, சக்தி குழும நிர்வாக இயக்குனர் மாணிக்கம், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தலைவர் சக்திவேல், சென்னை சில்க்ஸ் சந்திரன், பெஸ்ட் கார்ப்பரேஷன் குழும தலைவர் பெஸ்ட் ராமசாமி, 'சிறுதுளி'தலைவர் வனிதா மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு சமுதாய அமைப்பாக இருப்பினும் இங்கே வழங்கப்படும் விருதுகள் எந்த விருப்பு வெறுப்பும்  இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்படுவது பாராட்டுதலுக்குரியது. மேலும் விழா நடத்தக்கூடிய மாவட்டங்களின் அரசு பள்ளிகளில், அரசு கல்லூரிகளில் படிக்க கூடிய மாணவர்களின் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கப்படுவதும் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது எங்கள் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு நான் விண்ணப்பித்து இருந்தேன் மருத்துவம் படிக்கூடிய ஒரு பெண்ணுக்கும், upsc தேர்வுக்காக முயற்சி செய்யும் பெண்ணுக்கும் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கியது மேலும் மகிழ்ச்சி அளிக்கின்றது.