டெப்பாசிட் வாங்கக் கூடாது.. நடிகர் விஜய் க்கு எதிராக ஒன்று திரளும் ரஜினி - கமல் ரசிகர்கள்?

 

அரசியல்வாதியாக வெற்றி பெற விரும்பும் எவரும் ஒவ்வொரு வாக்கும் தனக்குத் தேவை என்று உணர்ந்தவர்களாக இருப்பார்கள். மத, சாதி மற்றும் பிற அடையாளங்களால் மக்களைப் பிரித்து ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை மட்டும் வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புகிறவர்கள் மட்டுமே வெளிப்படையாக சிலரை தங்களுக்கு வேண்டாதவர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். இந்துத்துவா அரசியல் செய்து வரும் பாஜக கூட பிற மதத்தினரை பொதுவெளியில் பகைத்துக் கொள்ள தயங்குவார்கள். பிற மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் தங்கள் கட்சியில் பொறுப்புகள் கொடுத்து அனைவரும் எங்களுக்குச் சமம் என்ற தொனியில் தான் அரசியல் நடத்துகிறார்கள்.

கட்சி தொடங்கும் வரையிலும் நடிகராக மட்டுமே  இருந்து வந்த விஜய் கட்சி தொடங்கி இரண்டாவது ஆண்டில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். கட்சியின் இரண்டாவது மாநாட்டை(?) மதுரையில் நடத்தி முடித்துள்ளார்.எந்த ஒரு கட்சியும் மாநாடு என்றால் குறைந்த பட்சம் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சி நிரல் வைத்து இருப்பார்கள். மாநாட்டுத் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படும். ஆனால் ஒரு சினிமா காட்சி நேரத்தை விடவும் குறைவான நேரத்தில் மாநாட்டை நடத்தி முடித்துள்ளார் விஜய்.

வந்திருந்தவர்களும் ரசிகர்கள் மனநிலையில் மட்டுமே இருந்தார்களே ஒழிய கட்சி, அரசியல் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் முயற்சியில் கூட ஈடுபடுவர்களாகத் தெரியவில்லை, சினிமாவில் வரும் அரசியல், தேர்தல், முதலமைச்சர் தான் நிஜமான அரசியல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும். சரி கட்சி மாநாட்டை ரசிகர் மன்ற மாநாடாகவே நடத்தி விட்டுப் போகட்டும். ஆனால் அந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் பேசும் பேச்சு மாநிலம் முழுவதும் சென்றடையுமே என்று கொஞ்சமாவது சிந்தித்து இருக்க வேண்டாமா? வந்திருக்கும் ரசிகர்களின் கைத்தட்டல்களுக்காக மட்டுமே பேசி விட்டுப் போனால் அதன் எதிர்வினைகள் என்ன என்று கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

திமுகவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்துள்ளார், பாஜகவையும் பிரதமர் மோடியையும் விமர்சித்துள்ளார். விமர்சித்த முறையில் உடன்பாடு இல்லையென்றாலும் ரெண்டுமே  தவெக அரசியலுக்கு சரிதான். திடீரென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியின் ஊழல்களை புதிதாகக் கண்டுபிடித்துள்ளார். இதன்மூலம் அதிமுகவினர் தன்னுடன் வந்துவிடுவார்கள் என்று ஒரு தப்புக் கணக்குப் போட்டுள்ளார். எம்ஜிஆர் விசுவாசிகள் இன்னமும் அதிமுகவில் இருக்கிறார்கள். அதிமுக அரசியல் பிடிக்காத எம்ஜிஆர் விசுவாசிகள் திமுகவுக்கு வந்துவிட்டனர். ஜெயலலிதா விசுவாசிகள் அதிமுகவில் தான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா நடிகர் விஜய் ஐ எப்படி வைத்திருந்தார் என்பதை ஜெயலலிதா விசுவாசிகள் மறக்கவும் இல்லை, இன்னமும் பழைய நிகழ்வுகளை ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தங்கள் கட்சியின் தலைமை மீது அதிருப்தி இருந்தாலும் கட்சி நலனுக்காக கட்டுப்பட்டு இருந்து வருகிறார்கள் இந்த அதிமுக தொண்டர்கள்.இவர்கள் ஒரு போது தவெக வுக்குச் செல்லப் போவதில்லை. அதிமுகவில் மதில் மேல் பூனையாக இருந்தவர்கள் திமுக, அமமுக, நாம் தமிழர், பாஜக என கடந்த தேர்தல்கள் காலத்திலேயே வேறு கட்சிகளுக்கு விலகிச் சென்று விட்டார்கள். மீதம் இருக்கும் 20 முதல் 25 சதவீத வாக்குகளைக் கொண்ட அதிமுக தொண்டர்கள், கட்சி எப்படியாவது நிலைபெற்று நின்று விடும் என உறுதியாக நம்பிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமே. இவர்க்ளை நடிகர் விஜய் தேவையில்லாமல் சீண்டியுள்ளார்.

இவர்க்ளாவது அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள். பல கட்சிகளில் இருக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களையும் மக்கள் நீதி மன்றம் என்ற ஒரே குடையில் இருக்கும் கமல் ஹாசன் ரசிகர்களையும் எந்த அவசியமும் இல்லாமல் சீண்டியுள்ளது தான் விஜய் இன்னமும் எழுதிக் கொடுத்த வசனத்தை உச்சரிக்கும் நடிகராக இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியாக உள்ளது.

சந்திரமுகி திரைப்பட காலத்திலிருந்தே ரஜினி ரசிகர்களை சீண்டி வருகிறார் விஜய். ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்குமான போட்டி ஒவ்வொரு ரஜினி திரைப்பட வெளியிடு நேரத்திலும் தொடர்ந்து வருகிறது. கூலி படத்திலும் நடந்த இந்த சண்டையின் போது ரஜினி ரசிகர்கள் எங்கள் ஓட்டு உங்களுக்கு கிடையாது என்று நேரடியாகவே சொல்லி விட்டனர். இந்த நிலையில் வருவேன் வருவேன்ன்னு சொல்லி வராமப் போறவன் நான் இல்லை என்று ரஜினிகாந்தை குறி வைத்துப் பேசியுள்ளார். இது போதாதா? பொங்கி எழுந்து விட்டனர் ரஜினி ரசிகர்கள்.

நம்மிடம் பேசிய சில நிர்வாகிகள், ரஜினி ரசிகன் என வெளிப்படையாக்த் தெரியும் ஒவ்வொருவர் பின்னாலும் குறைந்த பட்சம் 5 முதல் 10 வாக்குகளாவது உள்ளது. பலர் தங்கள் பகுதிகளில் செல்வாக்கு கொண்ட தன்னார்வலர்களாக தங்களை உருவாக்கிக் கொண்டவர்கள். அவர்கள் சொன்னால் அந்தந்தப் பகுதியில் கட்சி நிர்வாகி போல் வாக்குகள் திரளும். விஜய் ரசிகர்களையாவது மன்னித்து விடலாம் என்று பார்த்தால், விஜய் தான் கொடிய விஷமாக உள்ளதை வெளிப்படையாக் கொட்டி விட்டார். தவெக கட்சிக்கு எங்கள் வாக்குகள் கிடையவே கிடையாது. அக்கட்சிக்கு எதிரான தேர்தல் நடவடிக்கைகளில் கண்டிப்பாக செயல்படுவோம் என்று கூறினார்கள்

இது ஒரு பக்கம் இருக்க, ரிட்டயர்ட் ஆன பிறகு அரசியல் கட்சி தொடங்க வில்லை என்று கமல் ஹாசனையும்  தேவையில்லாமல் சீண்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர்களாகி விட்ட கமல் ரசிர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர். கமல் அரசியலில் சரியான நடவடிக்கை எடுத்து இன்று மாநிலங்களவை உறுப்பினர் ஆகி விட்டார். முடிந்தால் எங்களுடன் களத்தில் மோதட்டும் என்று மார் தட்டுகிறார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல் கமலும் ரஜினியுமே நண்பர்கள் தானே, எனவே ரஜினி ரசிகர்களையும் இணைத்துக் கொண்டு விஜய்க்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார்கள். ஆங்க்காங்கே இரு தரப்பு நிர்வாகிகளும் இது குறித்துப் பேசத் தொடங்கியுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக விஜய் போட்டியிடும் தொகுதியில் குறி வைத்து செயல்படப் போவதாக ரஜினி - கமல் ரசிகர்கள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கிறது. டெப்பாசிட் கூட வாங்க விடக்கூடாது என்று ஆவேசமாக உள்ளார்களாம் ரஜினி - கமல் ரசிகர்கள்

தவெக மாநாட்டில் விஜய் பேசியதை எழுதிக் கொடுத்தவர் சினிமா, தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனம் எழுதுபவராம்.  நடிகர் விஜய்யின் ரசிர்களையும் குஷிப்படுத்தியிருக்கலாம். ஆனால் இதனால் ஏற்படப் போகும் எதிர்மறை விளைவுகள் குறித்து எழுதியவரும் சிந்திக்க வில்லை. வசனத்தை ஆவேசமாக மேடையேற்றியவரும் சிந்திக்க வில்லை.

வாழ்க ஜனநாயகம்

-ஸ்கார்ப்பியன்