பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்.. தவெக தலைவர் விஜய் உத்தரவு
தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. நேற்று முன்தினம் காலையில் இருந்தே ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர். நேரம் செல்லச்செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
நேற்று நிலவரப்படி 42 பேர் பலியான நிலையில், இன்று காலையில் மேலும் பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 50 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில், நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், “தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.