தேர்தல் பிரசாரத்தில் விக்கரவாண்டி திமுக எம்எல்ஏ திடீர் மரணம்... தொண்டர்கள் அதிர்ச்சி!

 

விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன் காலமானார். அவருக்கு வயது 71.

1973-ம் ஆண்டு முதல் திமுகவில் பணியாற்றி வந்த நா.புகழேந்தி திமுகவின் கிளைக் கழகச் செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட பொருளாளர் பிறகு தற்போது விழுப்புரம் மத்திய மாவட்ட கழக செயலாளராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019-ம் ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவருக்கு மீண்டும் 2021-ம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியின் நெருங்கிய நண்பராகவும், தீவிர விசுவாசியாகவும் இருந்தவர் நா.புகழேந்தி. கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னையில் 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர். 

இந்நிலையில் நேற்று(ஏப். 6) விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு முதல்வர் வருகை புரிந்த நிலையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, தலைச் சுற்றி கீழே விழுந்தால் உடனடியாக அவர் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை எம்எல்ஏ புகழேந்தியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து அவரது மகன் புகழ் செல்வக்குமாருக்கு உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். எம்எல்ஏவின் திடீர் மறைவு, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.