ரூ.6,000 வெள்ள நிவாரணம் டோக்கன் வரவில்லையா? அதிகாரிகள் கொடுத்த விளக்கம்!

 
Ration

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு ரூ. 6,000 நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்படாதது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4-ம் தேதி பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நான்கு மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்தன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்த நான்கு மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 6,000 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக வீடு வீடாக சென்று டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Flood

அதைத்தொடர்ந்து புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளச்சேரியில் தொடங்கி வைத்தார். அதன்பின் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பயனாளர்களுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் டோக்கன் அடிப்படையில் மக்கள் வரிசையில் காத்திருந்து நிவாரணத் தொகையை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு 6,000 ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. அவ்வாறு டோக்கன் வழங்கப்படாததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. மிக்ஜாம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போரில் அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோரை தவிர்த்து நிவாரணப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாடு நிதித்துறை, மின் ஆளுமை முகமை வாயிலாக மென்பொருள் மூலம், குடும்ப அட்டையில் இருப்போரின் விவரங்களை அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் பட்டியலோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று வருமான வரி செலுத்துவோரின் விவரங்களும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் போது, வாகன பதிவுக்காக கொடுக்கப்பட்ட ஆதார் எண் அடிப்படையில் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போரின் விவரங்களும் தனியாக சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஆதார் எண் வாயிலாக பல்வேறு குடும்ப அட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு நிவாரண நிதி பெறுவோருக்கான பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, வருமானவரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி குடும்பத் தலைவர் பெயரில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போருக்கு நிவாரணத் தொகை வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பம் அளிக்கப்பட்டு, அதில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை இணைத்து ரேஷன் கடையில் வழங்கினால் உரிய பரிசீலனைக்கு பிறகு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.