பதட்டத்தில் பேசினாரா செந்தில் பாலாஜி? அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமியும் தான் பதறுகிறார்களா?
கரூர் துயரச் சம்பவத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பண்போடு கூறியிருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை பெரிய அளவில் விஜய் க்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். அரசுச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தலைமையில் அதிகாரிகள் தரப்பில் நடந்த நிகழ்வுகள் வரிசைப்படியாக வீடியோ மூலம் வெளியிடப்பட்டு சமூகத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட அதே விசயத்தைத் தான் செந்தில் பாலாஜியும் செய்தியாளர்கள் சந்திப்பில் வரிசைப்படி நடந்த நிகழ்வுகளைக் வீடியோ காட்சிகளுடன் பேசியுள்ளார். குறிப்பாக செந்தில் பாலாஜியை விஜய் விமர்சித்த பிறகு தான் செருப்பு வீசப்பட்டது என்ற எதிர்தரப்பின் குற்றச்சாட்டை வீடியோவில் தெளிவாக விளக்கி மறுத்துள்ளார். கரூர் மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்த் அமராவதி மருத்துவமனைக்குப் போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று அவர் எழுப்பிய கேள்வி, எதிர்த்தரப்பை நிலைகுலையச் செய்துள்ளது. இது எல்லாமும் எதிரணியினர் பரப்பும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மறுப்பதாக உள்ளது.
இந்நிலையில் பதிவு மூலம் ”கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது .இந்த நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில்,விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை
அதே போல் அதிமுக தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “கூட்ட நெரிசல் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, மின்துறை அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்துகின்றனர். டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார், முதல்வர் வீடியோ வெளியிடுகிறார், வருவாய்ச் செயலாளர், மருத்துவத் துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர், இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு.
இவ்வளவு பதற்றப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க திமுக. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா? ‘அரசியல் செய்யாதீர்’, ‘அரசியல் செய்யாதீர்’ என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே? உங்கள் பதற்றம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன? என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது” என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உண்மையிலேயே பதட்டப்படுவது அதிமுகவும் அண்ணாமலையும் தான் என்று தெரிகிறது. இவர்களின் குற்றச்சாட்டுகளை எல்லாம் வீடியோ ஆதாரத்துடன் மறுத்துக் கூறினால் பதட்டம் வரத்தானே செய்யும்!!