மூப்பனார் பிரதமர் ஆவதைத் தடுத்தாரா கலைஞர்? பாஜகவின் குற்றச்சாட்டு உண்மை தானா?
1996ம் ஆண்டு திமுக - தமாகா கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு தமாகா தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கு இருந்ததாகவும் அதை திமுக தலைவரும் அப்போதைய முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி தடுத்து விட்டதாகவும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு ஊடகங்கள் உண்மையில் நடந்தது என்ன என்று விளக்கமாக கூறியுள்ளார்கள். மூப்பனார் பிரதமர் ஆவது குறித்து கலைஞர் கூறிய கருத்தும் வைரலாகி வருகிறது. வதந்திகளையும் பொய்களையும் பரப்பும் கட்சி என்று பாஜகவுக்கு ஏற்கனவே ஒரு பெயர் இருந்து வரும் நிலையில், அந்த வரிசையில் மேலும் ஒரு பொய்யாக நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளது அம்பலமாகியுள்ளது.
1996 தேர்தலில் காங்கிரஸ், பாஜக இரண்டு தேசியக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாஜகவின் வாஜ்பாய் பிரதமர் பொறுப்பை ஏற்றார். ஆனால் எந்தக் கட்சியும் ஆதரவு தர முன்வராத நிலையில் 13 நாட்கள் ஆட்சிக்குப் பிறகு தாமாகவே பதவி விலகினார் வாஜ்பாய். இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க முன் வரவில்லை. மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்க முன் வந்தனர்.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் ஒன்று கூடினார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கலைஞரும் மூப்பனாரும் ஒரே விமானத்தில் சென்னையிலிருந்து டெல்லி சென்றனர். விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறதே என்று கலைஞரிடம் கேட்ட போது, தமிழருக்கு பிரதமர் வாய்ப்பு என்றால் மூப்பனாரைத் தவிர வேறு யாரை திமுக ஆதரிக்கும் என்று பதிலளித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுர்ஜித் மூப்பனாரிடம் பேசிப் பார்த்துள்ளார். அதற்கு மூப்பனார் தனக்கு பிரதமர் பதவி விருப்பம் இல்லை என்று சொன்னதாகவும் சுர்ஜித் கூறியிருக்கிறார். மேலும் மூப்பனாருக்கு அரசுப் பதவி ஏற்கும் விருப்பம் இல்லை என்று தன்னிடம் தெரிவித்ததாக, தஞ்சையில் நடந்த மூப்பனார் சிலை திறப்பு விழாவில் , அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார். பிரணாப் முகர்ஜியின் தமிழில் மொழி பெயர்த்தவர் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு தகவலும் உண்டு. மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்த மூப்பனார், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததால் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.
காங்கிரஸ் - அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. இது நரசிம்மராவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாகவும், மூப்பனார் பிரதமர் என்றால் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது என்று சொன்னதாகவும் ஒரு தகவல் உண்டு. மூப்பனாரே காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என்று தவிர்த்ததாகவும் கூறப்பட்டது.
ஆக, கலைஞர் மூப்பனார் பிரதமர் ஆவதை தடுக்கவில்லை என்பது தான் உண்மை. தமிழ்நாட்டில் மூப்பனார் பெயரும் மறைந்து விட்டது. அவருடைய ஆதரவு வட்டமும் ஜி.கே.வாசனுடன் சுருங்கி விட்டது. மூப்பனார் பிரதமர் ஆவதை திமுக தடுத்தது என்ற குற்றச்சாட்டும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் உண்மையாகும்