மதுரையில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு.. ஒரே நாளில் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதி!

 

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனையிலும் காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல் போன்ற பாதிப்புகளால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதில் கடந்த வாரம் மட்டும் 40 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில் நேற்று மட்டும் 19 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய இடங்களில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.