முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு.. சாட்டை துரைமுருகன் கைது!

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து,  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால், இங்கு திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. 

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 278 வாக்குச்சாவடிகளில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக 6 மணியளவில் நிறைவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 2.37 லட்சம் வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். ஆண்கள் 95,536 பேரும், பெண்கள் 99,944 பேரும், வாக்களித்துள்ளனர்.

முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான சாட்டை துரைமுருகன், அக்கட்சியின் வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்தும், தற்போதைய தமிழ்நாடு அரசு குறித்தும் கடுமையாக அவர் விமர்சித்து பேசினார். இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் புகார் அளித்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்வதற்காக சாட்டை துரைமுருகன் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். நெல்லை வீராணம் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் அவர் தங்கி இருந்த போது, அங்கு சென்ற திருச்சி சைபர் க்ரைம் போலீசார் அவரைக் கைது செய்து விசாரணைக்காக திருச்சி அழைத்துச் சென்றனர்.