இன்று ஆடிப்பெருக்கு.. இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை!

 

ஆடிப்பெருக்கை முன்னிட்டு இந்த மாவட்டங்களில் எல்லாம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தீர்த்தகிரி என்ற இயற்பெயர் கொண்ட தீரன் சின்னமலை ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியில் 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். இளமையிலேயே பல்வேறு வித்தைப் பயிற்சிகளை இளைஞர் படைகளோடு உருவாக்கி வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், மருது சகோதரர்கள், திப்பு சுல்தான் ஆகியோரோடு சேர்ந்து வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர்.

கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக போர் புரிந்து வந்த இவர், சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, இன்று (ஆகஸ்ட் 3) தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். எனினும் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதே போன்று நாமக்கல் மாவட்டத்திற்கும் இன்று கொல்லிமலையில் நடைபெற உள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் விழாவில் கலந்து கொள்ள வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.