மிக்ஜாம் புயல்.. டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக இன்று டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனிடையே வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் தீவிர புயலாக மாறியுள்ளது.

இது சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் தொடர்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகர்கிறது. இது இன்று முற்பகல் வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரையில் நிலைகொண்டு, கரைக்கு இணையாக வடக்கு திசையில் நகர்ந்து, நெல்லூர் - மசூலிப்பட்டணத்திற்கு இடையே நாளை (டிச. 5) முற்பகலில் கரையைக் கடக்கிறது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் 4 மாவட்டங்களில் இன்று (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பபட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானவுடன் இன்றைக்கு தேவையான மதுபானங்களையும் சேர்த்து மதுப்பிரியர்கள் நேற்று வாங்கி சென்றனர். மேலும் இந்த 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்றிரவு மதுப்பிரியர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.