4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் தாக்குதல்.. தமிழ்நாட்டில் நாளை பொது விடுமுறை..!
கனமழை நீடித்து வருவதால் நாளை 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பபட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ‘மிக்ஜாம்’ புயல் நேற்று உருவானது. புதுச்சேரிக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே சுமார் 90 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும்.
அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது. இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சென்னையின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது.
புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கனமழை நீடித்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதே போல, இந்த 4 மாவட்டங்களுக்கும் நாளையும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு தமிழகத்தில் அத்தியாவசிய சேவை வழங்கும் பால், மருந்து உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டும் இயங்கி வருகிறது.