சென்னையில் மீண்டும் முதலை நடமாட்டம்.. வைரலான குட்டி முதலையின் வீடியோ.. வனத்துறை வெளியிட்ட விளக்கம்

 

பெருங்களத்தூரில் சாலையின் ஓரம் கிடந்த குட்டி முதலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு துண்டிக்கப்பட்டது. இந்த மழைக்கு நடுவே, பெருங்களத்தூர் பகுதியில் 7 அடி முதலை ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கம் அளித்த வனத்துறையினர், இது சதுப்பு நிலத்தில் காணப்படும் மக்கர் வகை முதலை என்றும், இது மனிதர்களை ஒன்றும் செய்யாது என விளக்கமளித்தது.

இந்த நிலையில், சென்னை பெருங்களத்தூரில் சாலையில் ஓரத்தில் ஒரு குட்டி முதலை படுத்து கிடக்கும் வீடியோ வெளியாகி பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது.

இதையடுத்து சுமார் 1.5 அடி நீளம் கொண்ட பிறந்த சில நாட்களே ஆன இந்த முதலையை வனத்துறையினர் மீட்டு கிண்டி பூங்காவில் விட்டுள்ளனர்.