பற்றியெரிந்த கூட்டுறவு வங்கி... கரிக்கட்டையாக கிடந்த வங்கி மேலாளர்.. ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி!
ஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலாளர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு அனைத்து பணியாளர் சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுகுடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன் (52) செயலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயா என்ற மனைவியும், ஜெயஸ்ரீ, திவ்யாஸ்ரீ என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவருக்கு உதவியாக தற்காலிக பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று மதியம் ஸ்ரீதரன் பணிபுரியும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் இருந்தபோது, உடன் பணிபுரியும் அறிவுச்செல்வி பத்திரகாளி என்ற இரு பணியாளர்களும் சாப்பிட சென்றுள்ளனர். மதியம் 1 மணி அளவில் ஸ்ரீதரன் தனது மனைவி ஜெயாவுக்கு போன் செய்து தனக்கு மயக்கமாக வருவதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சற்று உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் மயக்கம் வருவதாக தெரிவித்ததால் பதறிய மனைவி ஜெயா சிக்கன நாணய சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களின் ஒருவருக்கு போன் செய்து என்னவென்று பார்க்கச் சொல்லியுள்ளார்.
இதற்கிடையே, வங்கியில் இருந்து திடீரென புகைமூட்டம் எழுந்துள்ளது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்கு தாமதமான நிலையில் பொதுமக்கள் சிக்கன நாணய சங்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மயங்கிய நிலையில் ஸ்ரீதரன் இருந்துள்ளார். அவரை வெளியே தூக்கி வந்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து சோதனை செய்தபோது ஸ்ரீதரன் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் மற்றும் வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்து குறித்தும், தீயினால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனர். சிக்கன நாணய சங்கத்தில் இருந்த இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பேட்டரி வெடித்ததால்தான் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.