பாஜகவினருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.. அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!
அதிமுகவினர் மத்தியில் பாஜக கூட்டணி குறித்து வெளிப்படையாக அதிருப்தி நிலவுவதால், பாஜகவினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். பாஜக என்று நேரடியாக குறிப்பிடாமல் கூட்டணி கட்சியினருக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.
2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் 2-வது நாளாக நேற்று பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்கள் காலையிலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்ட செயலாளர்கள் மாலையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். பாஜகவுன் கூட்டணி அமைந்த பிறகு, கீழ்மட்ட அளவில் அவர்கள் நம்மோடு எப்படி பழகுகின்றனர் என்றும் கேட்டறிந்ததுள்ளார்.
”இந்தத் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல். கட்சியின் வெற்றிக்காக அடுத்த ஓராண்டு காலம் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்க வேண்டும். வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்கள் நியமன பணிகளை விரைந்து முடித்து, அனைவரும் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். திமுக தவிர்த்து, தவெக உள்ளிட்ட பிற கட்சிகளை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். பாஜகவினருடன் கீழ்மட்ட அளவிலிருந்து மேல்மட்டம் வரை அதிமுகவினர் அனைவரும் இணக்கமாக பணியாற்ற வேண்டும். அப்போது தான் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றியை உறுதி செய்ய முடியும்.
கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் யாரும் மோதல் போக்கை கடைபிடிக்க கூடாது. திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.