தொடர் கனமழை.. இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடதமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழ்நாட்டின் பல இடங்களிலும், வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதனிடையே, பெரம்பலூர், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முதலே பெரம்பலூர் மாவட்டத்தில் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் குளம்போல தேங்கியுள்ளது.

இதனையடுத்து தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (09.01.2024) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.