2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ் - 394, ஆங்கிலம் - 252, கணிதம் - 233, இயற்பியல் - 292, வேதியியல் - 290, தாவரவியல் - 131, விலங்கியல் - 132, வரலாறு - 391, புவியியல் - 106 ஆகிய பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ஆசிரியர் தகுதித் தேர்வு 2-ல் தேர்ச்சிப் பெற்ற பட்டதாரிகள், வரும் நவம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். 2024ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும். அரசாணை எண் 149-ஐ பின்பற்றி, இந்த போட்டித் தேர்வு நடைபெறும்.
இத்தேர்வில் கலந்துகொள்பவர்கள் பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., முடித்திருக்க வேண்டும். தமிழ் பாடத்துக்கு 371 பணியிடங்கள், ஆங்கிலப் பாடத்துக்கு 214 பணியிடங்கள், கணிதப் பாடத்துக்கு 200 பணியிடங்கள், இயற்பியல் பாடத்துக்கு 274 பணியிடங்கள், வேதியியல் பாடத்துக்கு 273 பணியிடங்கள், வரலாறு பாடத்துக்கு 346 பணியிடங்கள் உள்பட 2,222 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் கூடுதல் தகவல்களை, http://www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை எண் 149 ரத்து இல்லை: தமிழ்நாட்டில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறை முன்னாள் ஆணையர் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 13,500 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த போட்டித் தேர்வு மூலம் முதற்கட்டமாக 2,222 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு இன்னொரு போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்பதுதான் பலரது கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்துதான், அண்மையில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசாணை எண் 149 ரத்து இல்லை என்பது உறுதியாகி உள்ளது.